கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, கோவை–மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான அறிக்கை (DPR) மாநில அரசு ஏற்கனவே வழங்கி 15 மாதங்கள் கடந்துவிட்டதாகவும், உலக வங்கி குழுவும் பலமுறை ஆய்வு செய்துள்ளதையும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மத்திய அரசு அற்ப காரணம் காட்டி திட்டத்தை நிராகரித்திருப்பது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என அவர் குற்றம்சாட்டினார். பாஜக ஆளும் மாநிலங்களில் ஐந்து மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்கப்படும் நிலையில், தமிழகத்திற்கு மட்டும் திட்ட அனுமதி மறுக்கப்படுவது அரசியல் நோக்கத்துடனே எனவும் அவர் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டணிக்கு கோவை மக்கள் 10 தொகுதிகளில் வெற்றி அளித்திருந்தபோதும், அவர்களுக்குக் கூட மெட்ரோ திட்டம் வழங்க மத்திய அரசுக்கு மனம் இல்லாதது மோடி அரசின் பாக அரசியல் என விமர்சித்தார்.
விரிவான அறிக்கையில் சந்தேகம் இருந்தால் 15 மாதங்கள் அவகாசம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், சென்னை மெட்ரோ திட்டம் போல கோவை–மதுரை திட்டங்களையும் மாநில அரசு சுமூகமாக செயல்படுத்தும் திறன் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்தியாவில் எந்த மாநிலங்களின் மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் கேள்வி எழுப்பி, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கவே இந்த முடிவு எடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

பாஜக அரசு உயர்த்திய வரியை மீண்டும் குறைத்து அதற்கே விழா கொண்டாடிய ஒரே கட்சி பாஜக எனவும், அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் “ஜீரோ” ஆனது என்றும், இதே நிலை சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று அவர் விமர்சித்தார்.
கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருவதை குறிப்பிடும் அவர், கோவையின் உண்மையான வளர்ச்சி திமுக ஆட்சிக்காலத்தில்தான் நடந்து வருகிறது என்றார்.
மெட்ரோ ரயில் திட்டம் கோவைக்கும் மதுரைக்கும் அவசியமானது என்பதால், மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.






; ?>)
; ?>)
; ?>)
