விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எம். துரைச்சாமிபுரம் ஊராட்சியில் குடிநீர் வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டனர்.

M.துரைச்சாமிபுரத்தில் தண்ணீர் 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. அதுவும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் தண்ணீர் வருவதே இல்லை. இப்பகுதி மக்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக தண்ணீர் வசதி வேண்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தண்ணீர் வசதிக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பதினைந்து நாட்களுக்குள் தண்ணீர் பிரச்சனையை சரி செய்கிறேன் என்ற வாக்குறுதி அளித்தார். வாக்குறுதியின்படி தற்போது வரை அப்பகுதியில் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படவில்லை. மேலும் ஆதிதிராவிடர் பகுதியில் வாருகால் சுத்தம் செய்தல், பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளும் நடைபெறவில்லை.
எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் துரைச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கண்ணன் துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலர் பேசினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், காவல் துறை சார்பு ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் தண்ணீர் பிரச்சனை சரி செய்வதற்கான பணிகள் நாளை முதல் துவங்கும் எனவும், ஒரு வாரத்திற்குள் அனைவருக்கும் சீராக தண்ணீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பொதுமக்களிடம் நேரடியாக வாக்குறுதி அளித்தார்.
போராட்டத்தை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் பேசினார். ஒன்றிய குழு உறுப்பினர் பால்சாமி, அம்மாபட்டி மாரிமுத்து, தர்மலிங்கம் உட்பட ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)