தஞ்சாவூர் மாவட்டம், ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பூக்கொல்லையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இரு இடங்களில், சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், ஊராட்சி செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலியபெருமாள், செல்வேந்திரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து பேசுகையில்,
“ஊராட்சி செயலாளர்கள் பெரும்பாலானவர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாகத் தான் இருப்பீர்கள். இன்றைக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்பில் இல்லை. அந்தப் பணிகள் அனைத்தையும் நீங்கள் தான் எடுத்து செய்கிறீர்கள். ஊராட்சிகளில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், கோரிக்கைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். உங்களுக்கு தேவையானவற்றை எந்த நேரத்திலும் என்னிடம் தெரிவிக்கலாம். மிகச் சிறந்த மாவட்ட ஆட்சியரை பெற்றுள்ளோம். அவரிடம் உங்கள் கோரிக்கைகளை தெரிவித்து நிறைவேற்றித் தருவேன். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நாம் இணைந்து செயல்படுவோம்” இவ்வாறு பேசினார்.

இதனைத் தொடர்ந்து, சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஒன்றியங்களைச் சேர்ந்த 63 ஊராட்சிகளின் செயலாளர்களிடம், ஊராட்சி வாரியாக உள்ள கோரிக்கைகள், நிறைவேற்ற பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து பிளாஸ்க், ஹாட் பாக்ஸ் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் அன்பளிப்பாக வழங்கினார்.

இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)