கோவை ஜி. டி. கார் அருங்காட்சியகத்தில் செயல்திறன் கார் பிரிவு (Performance Car Section) துவக்கப்பட உள்ளது குறித்து ஜி. டி. நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.டி.கோபால், அறங்காவலர்கஜி.டி. ராஜ்குமார், அகிலா சண்முகம் ஆகியோர் கூறுகையில் 2015ல் ஏப்ரல் மாதத்தில் இந்த கார் அருங்காட்சியகம் துவங்கப்பட்டதாகவும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
தற்போது புதிய முயற்சியாக இளைய தலைமுறையினர் வாகனங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள “பர்ஃபார்மன்ஸ் கார் பிரிவு” புதிய பகுதியை துவங்க உள்ளதா கூறியவர்கள்,

இந்தப் பிரிவில் ஸ்போர்ட்ஸ் கார்கள்,சூப்பர் கார்கள்,லக்சூரி கார்கள் மற்றும் ரேஸ் கார்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் லம்போர்கினி, ஃபெராரி, மெக்லாரன், லோட்டஸ், மசெராட்டி, அஸ்டன் மார்டின், மாஸ்டா, போர்ஷே பாக்ஸ்டர், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் போன்ற புகழ்பெற்ற வாகனங்கள் அடங்கும் என்றனர்.

கோவை கார் ஆர்வலர்களுக்கான ஒரு மையமாக இருப்பதால் இந்த துறையின் முன்னோடிகளையும் கோவையில் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரேஸ் கார்களையும் வெளிப்படுத்துவதற்காக ஒரு சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு புகழ்பெற்ற கார் பந்தய வீரர் கரிவரதன் உருவாக்கிய இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரேஸ் கார் – போர்டு ஜிடி40, எல்ஜிபி ரோலான், எம்ஆர்எப் 2000 போன்ற பல்வேறு ரேஸ் கார்களும் இடம்பெற்றுள்ளன எனவும் கோயம்புத்தூர் மோட்டார் விளையாட்டு துறைக்கு வழங்கிய சிறப்பான பங்களிப்புகளான “ஆட்டோ காம்போனென்ட்ஸ்,கோ-கார்ட், ஃபார்முலா ரேஸ் கார்கள், ரேஸ் டிராக்குகள், மோட்டார் விளையாட்டு அணிகள், பண்பாடு மற்றும் பாரம்பரியம்” ஆகியவற்றை இந்தப் பிரிவு வெளிப்படுத்துகிறது என்றனர்.