மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 5.90 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மதுரை மேற்கு மற்றும் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டும் பணியினை ஆய்வு செய்து பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிப்பதற்கு பொறியாளர்களுக்கு அறிவுத்தினார்.
இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தில் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் கொண்ட கட்டமாக கட்டப்படவுள்ளது. தரைத்தளமானது வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், ஒன்றியக் குழுத் தலைவர் அலுவலகம், மன்றக் கூட்ட அரங்கம் மற்றும் தேர்தல் பிரிவு கொண்ட தளமாகவும், முதல் தளமானது வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், பொறியியல் பிரிவு மற்றும் கோப்புகள் பராமரிக்கப்படும் பிரிவு கொண்ட தளமாகவும், இரண்டாம் தளமானது காணொளி காட்சி கூட்ட அரங்கு கொண்ட தளமாகவும் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து மதுரை வடக்கு வட்டம், கடச்சனேந்தல் பகுதியில் தமிழக அரசின் பங்களிப்போடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை கீழ் செயல்படும் ஜோ அந்திரியா பள்ளி மற்றும் விடுதியை ஆய்வு செய்து கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவு திறன்கள் குறித்து ஆய்வு செய்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். மேலும் விடுதியை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் ஒத்தக்கடை ஊராட்சி, நீலமேகம் தெருவில் நமக்கு நாமே திட்டம் மூலம் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடப் பணிகளையும், நூலகத்திற்கு சுற்றுச் சுவர் அமைப்பதற்கான பணியினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, ஒத்தக்கடையில் கிளை நூலகத்தை பார்வையிட்டு வாசகர்கள் வருகை குறித்தும், நூலகத்தில் உள்ள போட்டி தேர்விற்கான நூல்கள் குறித்தும் ஆய்வு செய்து நூலகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கொடிக்குளம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் அடிப்படை கற்றல் திறன்கள் குறித்து ஆய்வு செய்தார். ஒத்தக்கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காய்ச்சல் வார்டு, பதிவு செய்யும் இடம், உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தாமரைப்பட்டி ஊராட்சி, காயம்பட்டிமேடு கிராமத்தில் ரூபாய் 3.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மதுரை கிழக்கு வட்டாட்சியர் மனேஷ்குமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிராஜ் கதிரவன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் பொறியாளர்கள் முத்துலெட்சுமி, சுரேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.