தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுகள்தான். இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் ஒவ்வொரு ஆண்டும் சிறுவர்களை கவரும் வகையில் புதிய வடிவிலான பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு சிறுவர்கள் பார்த்தவுடன் கவரும் வகையில் தாங்கள் டிவிகளில் பார்க்கும் அனைத்து விதமான கார்ட்டூன்களையும் பட்டாசுகளாக நேரில் பார்த்து மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடும் வகையில் கார்டூன் வடிவத்திலும், பொம்மைகள் வடிவத்திலும் தயாராகியுள்ள பட்டாசுகள் அனைவரின் கவனத்தை வெகுவாக ஈடுத்துள்ளது. ஸ்மைல் எலிபெண்ட், ட்ரேகன் வொண்டர், லலிகா போன்ற பெயர்களில் குரங்கு, கிளி, யானை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பல வண்ணங்களில் வெடித்துச் சிதறும் வகையிலும், அதே நேரத்தில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் புதிய ரக பட்டாசுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் பட்டாசு உற்பத்தியாளர்கள்.

இதேபோல் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வேல், கடாயுதம், சுத்தியல் வடிவ பட்டாசுகளும், சிலிண்டர் வடிவ பட்டாசுகளும் இந்த ஆண்டு புது வரவாக வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் சரவெடிபட்டாசுகளுக்கு
உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் அதற்கு மாற்றாக “வந்தே பாரத்” ரயில் வடிவத்தில் டிஜிட்டல் சரவெடி இந்த ஆண்டு இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. மேலும் ஆப்ரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் ராணுவ பீரங்கி வாகன வடிவ பட்டாசுகளை அறிமுகம் செய்து இந்திய ராணுவத்தை பெருமைப் படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

பட்டாசு உற்பத்தியாளர்கள் பேட்டி: டோனி வின்சென்ட் தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடும் அதே நேரத்தில் பட்டாசு பெட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.