தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயன்ற வழக்கில் போடி ஜமீன் வடமலை ராஜபாண்டியன் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வடமலை ராஜபாண்டியனுக்கு சொந்தமான சுமார் 1.6 மீட்டர் நீளமுள்ள பெரிய யானை தந்தத்தை

மதுரை வளர் நகர் பகுதியில் உள்ள தனியாரிடம் விலை பேசி விற்க முயன்றதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் ரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற இடைத்தரகர்கள் ரகுநாத், சுப்பிரமணி, ரமேஷ் மணிகண்டன் மற்றும் சுதாகர் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட யானை தந்தத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதே சமயம், வனத்துறை வருவதை அறிந்த ஜமீன் வடமலை ராஜபாண்டியன் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றார்.

இச்சம்பவத்தையடுத்து, கைது செய்யப்பட்ட இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்தி வருகிற வனத்துறையினர், இவர்களுக்கு முன்பு யானை தந்தங்களை வாங்கி விற்பதற்கு முக்கிய நபர்களுடன் தொடர்பு இருந்ததா என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான ஜமீன் வடமலை ராஜபாண்டியனை தேடி வனத்துறையினர் வலைவீசி வருகின்றனர்.