கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து புறநகர் பேருந்துகளும் இன்று காலை 6:00 மணி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் பகுதியில் 12.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 9ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை 6.00 மணி முதல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து வழித்தடம் தொடங்கப்பட்டது.
திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து புறநகர் பேருந்துகளும் இயக்கம் செய்யப்பட்டது.

மேலும் தற்சமயம் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு பொதுமக்கள் வசதிக்காக பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் நகர பேருந்துகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மார்க்கத்திலிருந்து கரூர் வரும் பேருந்துகள் வழக்கம்போல் பழை பழைய பேருந்து நிலையம், லைட் ஹவுஸ், திருமாநிலையூர் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடையும், மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்ப செல்லும்.
மதுரை, திண்டுக்கல், பழனியிலிருந்து அரவக்குறிச்சி மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் சுக்காலியூர் ரவுண்டானாவிலிருந்து செல்லாண்டிபாளையம் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடைந்து மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்ப செல்லும்.

அதேபோல திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் குஜிலியம்பாறை மார்க்கத்திலிருந்து கரூர் வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்து மீண்டும் அதே வழியில் திரும்பி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கரூர் மேயர் கவிதா மற்றும் துணை மேயர் தாரணி சரவணன் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் செல்வதை பார்வையிட்டார்.