தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் அமைந்திருக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்டம் முகாமின் ஒரு பகுதியாக தேனி -மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள
கணவாய் வனப்பகுதிகளிலும், மலைச்சாலை ஓரங்களிலும் அப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பல நாட்களாக குவிந்து கிடந்த நெகிழிப்பைகள், குப்பைகள் , கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் அகற்றினர்

தொடர்ந்து நெகிழி பைகளை ஒழிப்பது குறித்த அவசியத்தை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் விதமாக
மதுரை -தேனி வழித்தடத்தில் சென்ற அரசு, தனியார் பேருந்துகள், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி நெகிழி பைகளை ஒழிப்பதற்கான அவசியத்தை விளக்கி கூறினர்

வனப்பகுதிகளிலும் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள இது போன்ற மலைச்சாலை ஓரங்களிலும் வாழ்ந்து வரும் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில்
நெகிழி பைகளையும், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளையும் இது போன்ற இடங்களில் வீசி செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு மாணவர்கள் வலியுறுத்தினர்.
இதன் மூலம் கணவாய் வனப்பகுதி மற்றும் மலைச்சாலை ஓரங்களில் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குவிந்து கிடந்த 300 கிலோவிற்கும் அதிகமான நெகிழிப்பைகள், குப்பைகள் , கண்ணாடி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டது.