விருதுநகரின் கண்ணீர்..
தீபாவளியின் இன்னொரு பக்கம்!
அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி… இந்த மாசமே தீபாவளி பட்ஜெட் பற்றி பெரும்பாலான குடும்பத்தில் பேச்சுகள் ஆர்மபித்துவிடும். புது டிரஸ், வெடி என பட்ஜெட் போட ஆரம்பித்துவிட்டோம்.
வெடி பார்சலுக்காக சிவகாசிக்கு பல்க் ஆர்டர் போடும் விசாரிப்புகளும் தீவிரம் அடைந்திருக்கும். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக டிவி சேனல்களும் தீவிரமாய் கன்டென்ட் வேட்டையில் இறங்கிவிட்டன.
இப்படி மாநிலமெல்லாம் தீபாவளியை மையமாக வைத்து ஒளிர்ந்துகொண்டிருக்க… ஒரு மாவட்டம் மட்டும் தீபாவளிக்காக கருகிக் கொண்டிருக்கிறது.
வளம் கொழித்த விருதுநகர் மாவட்ட கரிசல் மண் கடந்த நூறு ஆண்டுகளாக கந்தக பூமியாய் மாறி சுயத்தை இழந்துவிட்டது.
பயிர்த் தொழிலால் பல உயிர் பெருக்கிய விருதுநகர் மாவட்டம் ஒற்றை வாழ்வாதாரமாய் மாறிவிட்ட பட்டாசுத் தொழிலா தினம் தினம் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.
மத்தாப்பு எழுத்துக்களால் வானத்திலிருந்து வாழ்த்து சொல்லுமளவிற்கு பட்டாசுகளின் நவீன ரகங்கள் சிவகாசியை இந்தியாவின் குட்டி ஜப்பானாக மாற்றி, ஆண்டிற்கு சுமார் 5 ஆயிரம் கோடிகள் வருமானம் ஈட்டும் வளமான தொழிலாக வளர்த்துள்ளது என்றால் அது மிகைச் சொல் அல்ல.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 1570 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1101 உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை நிலையங்கள் உள்ளன.
இந்தியாவில் விற்பனையாகும் பட்டாசுகளில் 70 விழுக்காட்டிற்கும் மேல் சிவகாசியில் தயாரிக்கப்பட்டவையே. இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமமாகவும் சுமார் 5 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
பெசோ (PESO – Petroleum & Explosives Safety Organization) என்ற மத்திய அரசின் அமைப்பு இங்குள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகிறது.
ஆனாலும் பட்டாசுகளால் ஒவ்வொரு வருடமும் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகின்றது.
“எனக்கு பக்கத்து வீட்டுப் பொண்ணு. 8 மாதக் கர்ப்பிணியா எங்கூட வந்து வேல பாத்துச்சு. கொழந்தயப் பெத்து கொஞ்சி வாழணும்னு எம்புட்டு கனவுகளோட இருந்துருக்கும்? அந்த வெடி விபத்துல கருகி செத்துப்போனத நான் கண்கூடா பாத்தேன்.
பத்து வருசங்கழிச்சு மாசமா இருந்து குழந்தையப் பெத்த ஒரு தாயும், தகப்பனும் அந்த விபத்துலதான் செத்துப் போனாங்க. இப்ப அந்தக் கொழந்த அவங்க பெரியம்மா வீட்டுல தூத்துக்குடில வசிக்குது. என்னதான் சொந்தபந்தம்னு இருந்தாலும் பெத்தவுக இருக்கறது மாதிரி வருமா..? எங்கூட வேல பாத்த எங்க அண்ணன் பையன்,
ரொம்ப சின்னப்பைய, இந்தா ஒத்தக் காலு சிதைஞ்சு போயி இப்போ கட்டக்காலு மாட்டியிருக்கான். அவனுக்கு யாரு பொண்ணு குடுப்பா சொல்லுங்க..? எங்கேயாவது டமார்னு சத்தம் கேட்டா இன்னைக்கும் அந்த ஞாபகம்தான் வருது” என சூசை ரத்தினம் என்ற பெண்மணி கூறும்போது நமக்கே மிரட்சியாகத்தான் இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 350க்கும் மேல் உயிரிழந்துள்ளனர். 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் பெண்கள் அதிகமானோர் என்பதற்கு கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி சாத்தூர் அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலை விபத்து ஒரு சான்று.
தமிழகத்தை உலுக்கிய இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 16 பேர் பெண்கள். 26 பேர் படுகாயமடைந்து தற்போது வரை தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இழப்பீட்டிற்காகப் போராடி வருகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற விருதுநகர் முதலிப்பட்டி பட்டா சாலை விபத்தில் 40 பேர் இறந்தது தான் இதுவரை நடந்த விபத்துகளில் அதிகபட்சமான உயிரிழப்பு.
பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியம் (Fireworks, Match Workers’ Welfare Board) 2021 ஜனவரி 1 முதல் செயல்படுகிறது. மத்திய அரசின் ESI திட்டத்தின் கீழ் வராத இவ்வாரியத்தில் தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அங்குள்ள பெரும்பாலான தொழிலாளர்களுக்கு தெரியவில்லை என்பது வேதனை.
வெடி விபத்தில் தனது ஒரு காலை இழந்த முத்துக்குட்டி கூறுகையில், ‘குடும்பத்தோட கஷ்டமான நிலையில என்னோட 19 வயசுல பட்டாசு வேலைக்குப் போனேன். அந்த விபத்துலதான் என்னோட கால் போயிருச்சு. நான்தான் வேலைக்குப் போயி என்னோட குடும்பத்த காப்பாத்தியாகணும். எனக்குன்னு கனவு இருந்துச்சு. அது எல்லாம் இப்ப எப்பிடியாவது வாழ்ந்தாகணும்னு மாறிப்போயிருச்சு.
எங்க பகுதில பட்டாசுத் தொழிலத் தவிர வேற வழி இல்ல. அதனால மறுபடியும் அங்கதான் வேலைக்குப் போயிட்ருக்கேன். கடந்த 2021ல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு குடுத்த பின்னாடியும் எங்களுக்கு இதுவரை எந்த இழப்பீட்டுத் தொகையும் கிடைக்கல’ என விவரிக்கும்போது அவரது கண்ணில் கண்ணீர் வழிகிறது.
கடந்த 2011இல் 14 விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று 2012இல் 14 விபத்து 55 உயிரிழப்பு, 71 பேர் காயம்; 2013இல் 19 விபத்து 31 உயிரிழப்பு 36 காயம்; 2014இல் 10 விபத்து 19 உயிரிழப்பு, 6 காயம்; 2015இல் 9 விபத்து 6 உயிரிழப்பு 19 காயம்; 2016இல் 15 விபத்து 27 உயிரிழப்பு 15 காயம்; 2017இல் 5 விபத்து 13 உயிரிழப்பு 11 காயம்; 2018இல் 17 விபத்து 34 உயிரிழப்பு 6 காயம்; 2019இல் 12 விபத்து 10 உயிரிழப்பு 10 காயம்; 2020இல் 12 விபத்து 27 உயிரிழப்பு 14 காயம்; 2021இல் 13 விபத்து 43 உயிரிழப்பு 51 காயம்; 2022இல் 21 விபத்து 21 உயிரிழப்பு 22 காயம்; 2023இல் 29 விபத்து 37 உயிரிழப்பு 28 காயம்; 2024இல் 12 விபத்து 42 உயிரிழப்பு என விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளைக் கண்காணிக்கும் வட்டாட்சியர் அலுவலக புள்ளி விவரம் கூறுகிறது.
இதுபோன்ற விபத்துகளில் சிக்கும் தொழிலாளர்கள் இழப்பீட்டுத் தொகைக்காக போராடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய பட்டாசு ஆலை முதலாளிகள் ஒருவர்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை.
கடந்த ஜனவரி 4ஆம் தேதி சாத்தூர் அருகேயுள்ள பொம்மையாபுரம் சாய்நாத் பட்டாசு ஆலையில் நடைபெற்ற விபத்தில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா,
மேலும் அவர் கூறுகையில், ‘இங்குள்ள பல தொழிற்சாலைகள் முறையான அனுமதியின்றி குத்தகைதாரர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கான தொழில் உபகரணங்களும் கிடையாது. உயிருக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் அங்கே நிலவுகிறது. மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் கவனம் செலுத்தாதால் ஆண்டுதோறும் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பகுதியில் மாற்றுத் தொழில்களை ஊக்குவிக்க அரசு முன் வர வேண்டும்’ என்கிறார்.
விபத்து நேரும்போது முதல்வர் நிவாரண நிதியிலிருந்து மருத்துவம் உள்ளிட்ட செலவுகளுக்கு தமிழக அரசு அந்த நேரத்தில் உதவி வழங்கினாலும், அது போதுமானதாக இருப்பதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்டோர்.
பாலசுப்பு என்ற பெண் கூறுகையில், ‘அரசாங்கத்துலருந்து எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கல. என் உடம்பெல்லாம் தீக்காய தழும்புகள் உள்ளன. முன்ன மாதிரி வேலை எதுவும் செய்ய முடியல. போதுமான வருமானமும் இல்ல. அந்த வெடிச் சம்பவத்துல என்னோட காது கேக்காம போயிருச்சு’ என்கிறார் கண்ணீருடன்.
மற்றொரு பெண் ஜெயராணி கூறுகையில், ‘வெடிவிபத்துல கட்டடம் இடிஞ்சு கல்லு பறந்து வந்து மேலே விழுந்ததால என்னோட தோள்பட்டை இறங்கிருச்சு. இப்ப வரைக்கும் மருத்துவம் பார்க்கிறேன். அந்த நேரத்துல அரசு குடுத்த தொகை எதுவும் போதல. என்னோட அண்ணனுக்கும் இதே பிரச்சனை. அவரால வேல பாக்க முடியாது. அவருக்கு ரெண்டு குழந்தைங்க’ என்கிறார்.
பட்டாசு விபத்துக்கள் குறித்த ஆர்டிஐ தகவல்களைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்டப்போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் பீமாராவ் கூறுகையில்,
“தமிழகத்தையே உலுக்கிய மாரியம்மாள் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.15 லட்சமும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால் இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தமிழக அரசின் மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், தமிழக அரசைக் கடுமையாகக் கண்டித்தது உச்ச நீதிமன்றம்.
ஆனாலும் தற்போது வரை அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை தமிழக அரசால் வழங்கப்படவில்லை’ என்கிறார் வேதனையோடு.
பல்லாயிரம் கோடிகள் வருமானமீட்டும் சிவகாசி பட்டாசுத் தொழில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான தூண்டுகோலாக இருக்கின்றபோதும்… இந்தத் தொழிலால் எத்தனை எத்தனை குடும்பங்கள தூண்களை இழந்து சரிந்து கிடக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
இதை உணர்ந்து பட்டாசுத் தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
