நவராத்திரி தொடங்கிவிட்டது. புராணத்தின் அடிப்படையிலான பண்டிகை என்றாலும், ஒவ்வொரு நவராத்திரி பண்டிகையும் அந்தந்த டிரெண்டிங் ஏற்ற மாதிரி அப்டேட் ஆக ஜொலிக்கிறது.
அந்த வகையில்தான் மதுரையில் ரஜினி படங்களோடு ரசிக்க வைக்கும் கொலு தயாராகியிருக்கிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஸ்ரீ ரஜினி திருக்கோயில் என்ற பெயரில் தனது வீட்டிற்குள்ளேயே நடிகர் ரஜினிக்கென்று கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார் கார்த்திக் என்ற ரஜினி ரசிகர்.
இந்நிலையில் இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் நவராத்திரியை முன்னிட்டு ரஜினி நடித்த படங்களின் கதாபாத்திரங்களை வைத்து கொலு அமைத்துள்ளார். இந்தக் கொலு அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து அரசியல் டுடேவிடம் கார்த்திக் கூறுகையில், “தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த கொலுவை நாங்கள் அமைத்துள்ளோம். ரஜினி நடித்த பல்வேறு படங்களின் கதாபாத்திரங்களை கொண்டு, ஐந்து கொலு படிகளில் தெர்மாகோல் மூலமாக அவை உருவாக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோக நாங்கள் ரஜினிகாந்தை சந்தித்தபோது அவர் எங்களுக்கு பரிசளித்த படையப்பா சிலையை இங்கு காட்சிப்படுத்தியுள்ளோம். மேலும் 5 படிகளில் நாங்கள் ரஜினியை கடவுள் அம்சமாக கருதுவதால் சிவனாக கிருஷ்ணராக வடிவமைப்புச் செய்துள்ளோம். அவர் தனது படத்தின் வாயிலாக சமூகத்திற்கு சொன்ன நல்ல கருத்துக்களையும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
இந்த வரிசையில் 233 கொலு பொம்மைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரஜினி தமிழ் திரைப்படத் துறைக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் விதமாக இந்த கொலு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படையல் வைத்து நாங்கள் வழிபட்டு வருகிறோம” என்றார்.
கார்த்திக்கின் மனைவி ரோகிணி கூறுகையில், ”நவராத்திரி முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பூஜை புனஸ்காரங்கள் ரஜினி சிலைக்கு நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதுபோக இங்கு வருகின்ற ஒவ்வொருவருக்கும் 2026 ஆம் ஆண்டு டைரி பரிசாக வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய கார்த்திக் மகள் அனுஷா கூறுகையில், “ஜானி பட திரைப்பட கதாபாத்திரத்தை களிமண்ணில் உருவாக்கி இந்த கொலுவில் வைத்துள்ளோம். அவரது திருக்கோவில் அமைந்துள்ள இந்த அறை முழுவதும் சுமார் 5500 ரஜினியின் படங்கள் ஒட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
ரஜினின்னா ரஜினிதான்!
