தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் உரிமைகள் உள்ளது என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து எதிர்கட்சிகளும், அனைத்து தரப்பு மக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழக அரசு உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக நீதி என்று பேசிக்கொண்டிருக்கும் திமுக அரசு எவ்வளவு பெரிய துரோகத்தை தமிழக மக்களுக்கு செய்து வருகிறது. பீகார், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு சில மாநிலம் நடத்தி முடித்து விட்டன. இந்நிலையில் தமிழகத்திற்கு மட்டும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை எனக் கூறுவது ஏற்க முடியாது. தமிழக அரசு பொய் சொல்லி வருகிறது.
கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாதிவாரி என பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என பெயரை மாற்றி உடனடியாக கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
இது ஒரு ஜாதி பிரச்சனை கிடையாது. தமிழகத்தில் உள்ள ரெண்டரை கோடி குடும்பங்களின் நிலையை கண்டறிய வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் துல்லியமாக இரண்டு மாதங்களில் கணக்கெடுப்பை நடத்தி முடிக்கலாம்.
இப்ப எடுக்கின்ற கணக்கெடுப்பை அடுத்து வரக்கூடிய 50 ஆண்டுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாலம். இந்த கணக்கெடுப்பின் மூலம் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாம், நலத்திட்ட உதவிகளை அதிகப்படுத்தலாம், 500 கோடி செலவு செய்து 3 லட்சம் அரசு ஊழியர்களை பயன்படுத்தி இரண்டு மாதத்தில் கணக்கெடுப்பு முழுமையாக முடிக்கலாம்.