திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வருகை தந்தார். அப்போது பழனியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :

தமிழகத்தில் பெரு தெய்வ வழிபாட்டு கோவில், சிறு தெய்வ வழிபாட்டு கோவில் என அயிரக்கணக்கான கோவில்கள் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பெரு தெய்வ வழிபாட்டுக் கோவில்களில் அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறது. வேலையில் சிறு தெய்வ வழிபாட்டு கோவில்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சிறு கோவில்களில் சாதி பாகுபாடு இன்னும் நீடித்து உள்ளது. சிறு கோவில்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று வருவது பெரும் பிரச்சனையாக உள்ளது. ஏற்கனவே இந்து மதத்தில் ஆதிப் பாகுபாடு உள்ளது என்று கூறி மதமாற்றம் செய்யும் முயற்சியில் சர்வதேச சக்திகள் இயங்கி வரும் நிலையில், கிராம கோவில்களில் ஏற்பட்டுள்ள இது போன்ற பிரச்சனைகள் மதமாற்றம் செய்ய அதிகளவில் வாய்ப்பை கொடுக்கிறது. சமீப காலமாக மதமாற்றம் என்பது அதிகரித்து வருகிறது. எனவே மத்திய மாநில அரசுகள் கோவில்களில் சம நிலையை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மதமாற்றம் செய்வதை எடுக்கும் வகையில் சட்டம் இயற்றவும் முன்வர வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சி சார்பில் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆண்கள் குடிக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர். தமிழக அரசு டாஸ்மாக் வருவாயை அதிகப்படுத்தும் நோக்கிலேயே செயல்படுகிறது என்றும், இப்போதைய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த 2011, 2012ம் ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது என்றும், தமிழக மக்களின் நலனை கருதி வருகிற ஜனவரி 14-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
வருகிற அக்டோபர் மாதம் 23ஆம் தேதி பழனியில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5நாட்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொதுமக்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய தமிழகம் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது என்றும், அப்போதுதான் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து புதிய தமிழகம் கட்சி முடிவு எடுக்கும் என்றும், இருப்பினும் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழித்து கூட்டணி ஆட்சியை அமைப்பது ஒன்றே கொள்கை என்றும், கூட்டணி ஆட்சிக்கு சம்மதிக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து புதியதமிழகம் தேர்தலை சந்திக்கும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் அயல் நாடுகளுக்கு சென்று ஈர்த்த அயல்நாட்டு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளைத் தாளை காட்டிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் செயல் அவர்களிடம் ஒன்றும் இல்லை என்பதையை காட்டுகிறது என்றும், அயல்நாட்டு முதலீடு என்பது எதுவும் இல்லை.. அது வெறும் வெற்றுக்காகிதம் என்பதை தெளிவு படுத்தும் வகையில் வெள்ளைக் காகிதத்தை காட்டியுள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். திமுகவின் திட்டங்கள் தமிழக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளவை கண்டு மறைத்துப் போனதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருப்பது அவர் தனி உலகத்தில், ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து வருவதை காட்டுகிறது. தமிழக மக்களின் வாழ்வு நிலை பொருளாதாரம் சுகாதாரம் நிலையான வேலையின்மை இளைஞர் நலன் கல்வி ஆகியவற்றின் நிலை குறித்து தமிழக முதலமைச்சர் எதையுமே தெரிந்து கொள்ளாமல் விளம்பர உலகத்தில் வாழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் விஜயகுமார் மாவட்டச் செயலாளர்கள் பிரதீப் பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.