• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இலக்கிய திறனறித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

Byவிஷா

Sep 26, 2025

பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் வகையில், தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: “தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வித பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2022ம் ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் 1,500 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
அதன்படி நடப்பாண்டுக்கான திறனறித் தேர்வு வரும் அக்டோபர் 11ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 21ம் முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் மற்றும் ஹால்டிக்கெட் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
இதுதவிர மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஹால்டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பமிட வேண்டும். இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.