கோவை, மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் அறக்கட்டளை இணைந்து, சமீபத்தில் கோவை மாநகரில் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன் எனும் பிரச்சாரத்தை துவங்கியது,

பல்லாயிரக்கணக்கான மக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், வரும் அக்டோபர் மாதத்தில் கோவை மாநகரில் விபத்தில்லா வாரத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளதுஇதன் ஒரு பகுதியாக சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை மாநகரில் பரப்ப, வேண்டும் என, சுமார், 20 கிமீ நீளத்திற்கு சாலைப் பாதுகாப்புக்கான மனிதச் சங்கிலி பிரச்சாரம் நடைபெற்றது. இந்த 20 கிமீ மனித சங்கிலியானது கோவை நகரின் 4 முக்கிய சாலைகளான ரேஸ் கோர்ஸ் சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை மற்றும் அவினாசி சாலை என 4 பகுதிகளில் நடைபெற்றது.

இதில் கோவை மாநகரின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள உயிர் சங்க மாணவர்கள் உடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த 10,000க்கும் அதிகமான மக்கள் இணைந்து கைகோர்த்து, மனித சங்கிலி வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அவினாசி சாலையில் உள்ள, அண்ணா சிலை முதல் கோவை விமான நிலைய சிக்னல் வரை 10 கிலோமீட்டர் தூரம், பாலக்காடு சாலையில் குனியமுத்தூர் முதல் கோவைப்புதூர் பிரிவு வரை 5 கிலோமீட்டர் தூரம், பொள்ளாச்சி சாலையில் ரத்தினம் கல்லூரி முதல் மாலுமிச்சம்பட்டி வரை 4.5 கிலோமீட்டர் தூரம், மற்றும் ரேஸ் கோர்ஸ் பகுதியில் காஸ்மோபாலிட்டன் கிளப் முதல் அரசு கலைக் கல்லூரி வரை 0.5 கிலோமீட்டர் தூரம், என இந்த 4 பகுதிகளில் கைகோர்த்து மனித சங்கிலியாக நின்றனர்.
அண்ணா சிலையில், இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர், உயிர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ். ராஜசேகரன், உயிர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் இந்த பிரச்சாரத்துக்கு ஆதரவு வழங்கிய அமைப்புகள், மற்றும் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் முன்னிலையில் ஆட்சியர் துவக்கிவைத்தார்.
‘நான் உயிர் காவலன்’ திட்டத்தின் மூலம், அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகள் மூலம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை கோவை மாநகர் முழுவதும் அதிக அளவிலான மக்களிடம் எடுத்து சென்று, விபத்தில்லா கோவை சாத்தியம் என்பதை எடுத்துக்காட்ட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.