• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மரம் நடும் விழா மூலம் தங்கசாமிக்கு அஞ்சலி.,

ByKalamegam Viswanathan

Sep 16, 2025

மரம் தங்கசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகமெங்கும் 65-க்கும் மேற்பட்ட இடங்களில் மரம் நடும் விழாக்கள் இன்று (16/09/2025) நடைபெற்றது. இதன் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிம்பர் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி அவர்கள், டிம்பர் மர சாகுபடி குறித்து விவசாயிகள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, எண்ணற்ற விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற்றினார். அவர் ஈஷாவின் ஆரம்பகால இயக்கமான பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து நீண்ட காலம் பணியாற்றினார்.

அந்த வகையில், அவரது நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள 67 விவசாய நிலங்களில், 434 ஏக்கர் நிலப்பரப்பில் மொத்தம் 1,04,602 டிம்பர் மரக்கன்றுகள் நடப்பட்டது. இது தவிர, ஈஷா யோக மையம் மற்றும் பேரூர் ஆதீனம் இணைந்து செயல்படுத்தும் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டத்தின்படி, 14 பஞ்சாயத்துகளில் 114 அரச மரங்கள் நடப்பட்டது.

விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் இரண்டையும் ஒருசேர மேம்படுத்த சத்குருவின் வழிகாட்டுதலில் காவேரி கூக்குரல் இயக்கம் துவங்கப்பட்டது. இவ்வியக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகள் மத்தியில் முன்னெடுத்து வருகிறது. மரம் சார்ந்த விவசாயத்தை மேற்கொள்வதால் மண்வளம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரம் ஆகியன ஒரே நேரத்தில் மேம்படும். இவ்வியக்கம் மூலம் தமிழகத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்துக்கு மாறியுள்ளனர்.

காவேரி மற்றும் தமிழக ஆறுகளின் வடிநிலப் பகுதிகளில் 242 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் களத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் (2025 – 26) 1.20 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நடுவதற்கு திட்டமிடப்பட்டு, இதுவரை 44,96,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஈஷா மூலமாக கடந்த 25 ஆண்டுகளில் விவசாய நிலங்களில் 12 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு, மரம் சார்ந்த விவசாயம் தொடர்பான பயிற்சிகளையும், விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் காவேரி கூக்குரல் இயக்கம் நடத்தி வருகிறது. மேலும் இவ்வியக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கே நேரடியாக சென்று, விவசாயிகளுக்கு மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதிலும் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

தற்போது மழைகாலம் துவங்கியுள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது. டிம்பர் மரக்கன்றுகள் 5 ரூபாய்க்கும், இதர மரக்கன்றுகள் 10 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. மேலும் ஜாதிக்காய், அவகோடா, சர்வசுகந்தி, லவங்கம், மிளகு ஆகிய விலை உயர்ந்த நறுமணப் பயிர் கன்றுகள் குறிப்பிட்ட அளவு இருப்பு உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.