மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெரு நாய்களால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக பொதுமக்கள் நடமாடும் இடங்கள் விவசாய நிலங்களில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் பொதுமக்கள் தாய்மார்கள் குழந்தைகளை அழைத்துச் செல்பவர்கள் ஒரு வித அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது ஆட்டு மந்தையில் புகுந்த தெரு நாய் அங்கிருந்த ஒன்றறை லட்சம் மதிப்புள்ள ஐந்து ஆடுகளை கடித்து குதறியதில் 5 ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த ஆடுகளில் இரண்டு ஆடுகளை தெரு நாய்கள் வயில்களுக்குள் இழுத்துச் சென்றது.
தகவல் அறிந்து ஆட்டு மந்தைக்கு வந்த அதன் உரிமையாளர் ஜெயராமன் இறந்து கிடந்த ஆடுகளை பார்த்து கதறி அழுதது வேதனையை கொடுத்தது.

அவர் கூறுகையில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வாழ்வாதாரத்திற்காக வளர்த்து வந்த நிலையில் இன்று ஆட்டு மந்தைக்குள் புகுந்த தெரு நாய் 5 ஆடுகளை கடித்து கொன்று விட்டது. இதில் இரண்டு ஆட்டை இழுத்துச் சென்று விட்டது. தெரு நாய்களால் தினசரி ஆடுகளை பாதுகாப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. வருவாய் துறையினர் இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.