2025 - கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் “போதை இல்லா கோவை” விழிப்புணர்வு மாரத்தான் இன்று (செப்டம்பர் 14) கோவை நேரு விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியை காவல்துறை, கோயம்புத்தூர் தெற்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு, இணை ஆணையாளர், திரு. ஜி. கார்த்திகேயன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து பி கே தாஸ் பல்கலைக்கழக சார்பு வேந்தரும், நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும், செயலாளருமான டாக்டர். பி. கிருஷ்ணகுமார் கூறியதாவது :- கோவை நேரு கல்வி குழுமம், பிட் இந்தியா மற்றும் சஸ்டேன்சியால் டெவலப்மெண்ட் கோல்ஸ் சார்பில் கோவை நேரு ஸ்டேடியம் முன்பு “போதை இல்லா கோவை” என்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது. இந்த “போதை இல்லா கோவை” விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் என சுமார் 2,300 பேர் கலந்து கொண்டனர். இதில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 3 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 கிலோமீட்டர் என இரண்டு போட்டிகள், நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய், மெடல், சான்றிதழ், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய், மெடல், சான்றிதழ் மற்றும் மூன்றாவது பரிசாக ரூபாய் ஆயிரம், மெடல், சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மெடல், சான்றிதழ், டி-சர்ட் மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இந்த 3 கிமீ மாரத்தான் போட்டியானது கோவை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி, கேரளா கிளப் வழியாக ஆர்டிஓ அலுவலகம் முன்பு யூ டேர்ன் செய்து அண்ணா சிலை வந்து மீண்டும் கேரளா கிளப் வழியாக நேரு ஸ்டேடியத்தை வந்தடைந்தது. ஐந்து கிமீ மாரத்தான் போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் துவக்கி கேரளா கிளப் வழியாக மகளிர் பாலிடெக்னிக் வரை வந்து மீண்டும் அண்ணா சிலை வழியாக கேரளா கிளப் சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கை அடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
காவல்துறை, கோயம்புத்தூர் தெற்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு, இணை ஆணையாளர், திரு. ஜி. கார்த்திகேயன் அவர்கள் கொடியசைத்து “போதை இல்லா கோவை” மாரத்தான் நிகழ்வை துவக்கி வைத்து பேசியதாவது :- தமிழகத்தில் போதை பழக்கத்தை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையும், அரசும் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் தங்களது கல்லூரி நாட்களில் நல்ல ஒழுக்கத்துடனும், பழக்க வழக்கத்துடனும் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நமது நண்பர்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். தங்களது நண்பர்கள் தீய பழக்கத்திற்கு அடிமையாக நினைக்கும்போது கல்லூரி ஆசிரியர்களிடமோ, அவர்களின் பெற்றோர்களுக்கோ தகவல் தந்து அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.