• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பட்டியலினத்தை சேர்ந்தவரை எச்சிலை துப்பி நக்க வைத்த கொடூரம்: தேர்தலில் தோற்றதால் வெறிச்செயல்

சாதி ரீதியாக மக்கள் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த காலம் மெல்ல மெல்ல மாறி வந்தாலும், நாட்டின் மூலை முடுக்குகளில் தற்போதும் மக்கள் ஒடுக்குமுறையை அனுபவித்துக் கொண்டு தான் வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் வீடியோ ஒன்றில், பட்டியலினத்தைச் சேர்ந்த இருவரை எச்சிலை துப்பி அதை நக்கவைத்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது.

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து ஒன்றில் நடைபெற்ற தேர்தலில், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய பல்வந்த் சிங் என்ற நபர், பட்டியலின மக்கள் தனக்கு வாக்களிக்காதது தான், தனது தோல்விக்கு காரணம் என ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.


இந்நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த பட்டியலின பிரிவைச் சேர்ந்த இருவரை சாலையில் வைத்து திட்டிய பல்வந்த் சிங் அவர்களை அடித்துள்ளார், சாலையில் எச்சிலை துப்பி, அதை அவர்கள் இருவரையும் நக்க வைத்துள்ளார். மேலும் காதுகளை பிடித்துக் கொண்டு இருவரும் உட்கார்ந்து எழ மிரட்டி பணிக்கப்பட்டனர். வாக்களிக்க பணம் தந்தும் இவர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என அருகில் இருப்போரிடம் பல்வந்த் சிங் கூறுகிறார். இதனை அருகாமையில் இருக்கும் ஒருவர் வீடியோவாக எடுக்க அந்த வீடியோ சமூக வலைத்தளஙக்ளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வீடியோ விவகாரம் பூதாகரமாக மாறிய நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய பல்வந்த் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட எஸ்பி கந்தேஷ் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.
அதே நேரத்தில் வீடியோவில் காணும் இருவர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே அங்கு பிரச்னை நடந்ததாகவும் பல்வந்த் சிங் விளக்கம் அளித்துள்ளார்.