தலைவர் வெளிநாட்டில் இருக்கும் இந்த நேரத்தில், எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்கிற அச்சுறுத்தலில் இருக்கிற சில மாவட்ட செயலாளர்கள் அறிவாலயம் சென்று முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தங்களின் மீதான விசாரணை அறிக்கைகளை நீர்த்துப் போக செய்யும் வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். இதற்காக அறிவாலய நிர்வாகிகளுக்கு அன்பாக கவனிப்பும் நடக்கிறதாம். தலைவர் வெளிநாடு சென்று வருவதற்குள் இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ என்று புலம்புகிறார்கள் அங்கே நடப்பது அறிந்த மற்ற நிர்வாகிகள்.
தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என அண்ணியார் பேசிய பேச்சு அதிமுகவினரை அதிர வைத்தது. ஏற்கனவே மூப்பனார் நினைவு தின நிகழ்வு தேசிய ஜனநாயக கூட்டணி நிகழ்வாக நடந்த நிலையில் தன்னுடைய தம்பியை அங்கே அனுப்பி வைத்திருந்தார் அண்ணியார். அதே நேரம் எடப்பாடி பற்றி இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டதால் அதிமுகவினர் கோபமாகி சில நிர்வாகிகள் அண்ணியாரிடமே தொடர்பு கொண்டு திமுகவுக்கு தலையையும் அதிமுகவுக்கு வாலையும் காட்டுகிற வேலைகள் வேண்டாம், என்று எடப்பாடி சார்பில் எச்சரித்து இருக்கிறார்கள்.
அடுத்த நாளே நான் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அப்படி பேசவில்லை பத்திரிக்கையாளர்கள் தவறாக செய்தி வெளியிட்டு விட்டார்கள் என கண்டனம் தெரிவித்திருக்கிறார் அண்ணியார்.
இதைக் கேட்டு இவங்க கேரக்டரை புரிஞ்சிக்கவே முடியலையே என திமுகவினரே திகைக்கிறார்கள்.
சமீபத்தில் மிகவும் பரபரப்பாக அறிவாலயம் சென்று அக்கட்சியிலே சேர்ந்தார் அதிமுகவை சேர்ந்த அந்த டாக்டர். சேர்ந்துவிட்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி தடித்த வார்த்தைகளையும் பேசினார். தனக்கு திமுகவில் ஏதேனும் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இங்கே சென்ற டாக்டரை அன்றோடு மறந்துவிட்டது திமுக தலைமை. ஒரு பிராமணருக்கு கட்சிப் பதவி கொடுக்கலாமா என்ற ஆலோசனையில் அவருக்கு சாதகமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை யாம். அவசரப்பட்டு விட்டோமோ என்று அங்கலாய்ப்பில் இருக்கிறார் டாக்டர்.
சமீபத்தில் தோழமைக் கட்சியின் மாநில செயற்குழு மாநாடு நடந்து முடிந்தது. ஆனால் அக்கட்சியில் இதுவரை நடக்காத அதிசயமாய் மாநில செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இப்போது தலைவராக இருக்கும் முத்தான அவருக்கு எதிராக சில சத்தானவர்கள் ஒன்று திரண்டதால் தேர்தலை தள்ளிப் போட்டது கட்சி. சொன்ன காலக்கெடு முடிந்தும் தேர்தல் நடைபெறவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவர் மருத்துவமனையில் இருப்பதால், அவர் நன்றாக ஆகி வரட்டும் என இப்போதைக்கு இந்த விஷயத்தை ஆற போட்டு வருகிறாராம் அந்த முத்தானவர்.
