மிலாது நபியை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் பகுதியில் நபிகள் நாயகத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் வண்ணம் குழந்தைகளின் பேரணி நடைபெற்றது…

இஸ்லாமிய மக்களின் கடவுள் தூதுவராக விளங்கும் முகமது நபிகள் பிறந்தநாளை அவர்கள் மிலாது நபி நாளாக கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் நபிகள் நாயகத்தின் பெருமைகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு பிரியாணி உணவு சமைத்து அனைவருக்கும் வழங்கி மிலாது நபியை கொண்டாடுவர்.
அதன்படி கோவையில் நடைபெற்ற மிலாது நபி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செல்வபுரம் பகுதியில் உள்ள உதயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் சார்பில் நாது நபி தினம் கொண்டாடப்பட்டது. இதில் இஸ்லாமிய குழந்தைகள் நபிகள் நாயகத்தின் பெருமைகளை பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் வண்ணம் இசை இசைத்து நடனமாடி பாடல்கள் பாடி பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியானது செல்வபுரம் பள்ளிவாசலில் துவங்கி முத்துச்சாமி நகர், கல்லாமேடு அண்ணா சாலை ஆகிய பகுதிகள் வழியாக சென்றது.

நபிகள் நாயகத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் வண்ணம் நடைபெற்ற குழந்தைகளின் பேரணி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிகழ்வில் தலைவர் ஹைதர் அலி மற்றும் பள்ளிவாசல் தலைமை இமாம் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பாஷா, அக்பர், முகமதலி, ஷாஜி, ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.