திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குட்டுப்பட்டி ஊராட்சி பெரிய மலையூர், பள்ளத்துக்காடு, சின்ன மலையூர் வலசை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு முறையான சாலை வசதி இல்லை.

இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கும் விவசாய விலை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், மருத்துவ வசதி பெறுவதற்கும் நீண்ட தூரம் கரடு முரடான மலையில் உள்ள குறுகலான பாதைகள் வழியாகவே சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து அரசிடமும் அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்தும் நேரில் முறையிட்டும் பலனில்லை என கூறப்படுகிறது. எனவே மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என தமிழர் தேசம் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மலை கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




