இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஆகஸ்டு 27 ஆம் தேதியில் இருந்து 50 சதவிகிதம் வரி விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
இது ஏதோ சர்வதே செய்தி, நமக்கென்ன என்று இருக்க முடியாது. ஏனென்றால், அமெரிக்காவில் டிரம்ப் எடுத்த இந்த முடிவால், தமிழ்நாட்டின் ஜவுளித் தொழில் துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 20 சதவீத அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் ஆகும். அமெரிக்காவுக்கு ஓராண்டில் ரூ.8,650 கோடி அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. “ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் ரத்தினக் கற்கள், நகைகள், ஆடைகள், ஜவுளி மற்றும் ரசாயனங்கள் முதலான தொழில் பிரிவுகளில் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது” என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தொழில் நகரமான திருப்பூர் ‘டாலர் சிட்டி’ என்றழைக்கப்படுகிறது.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் 30 சதவீத ஏற்றுமதி அமெரிக்க சந்தையை நம்பி இருப்பதால், இந்த வரி விதிப்பு ஜவுளித்தொழிலை வெகுவாக பாதிக்கிறது.
சில நாட்களுக்கு முன்பே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், “அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால், ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் வரி விதிப்பு இது தமிழ்நாட்டின் ஜவுளியை எவ்வாறு பாதிக்கும்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) தலைவர் கே.எம். சுப்பிரமணியன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,
“கிட்டத்தட்ட 60% பின்னலாடை ஏற்றுமதி திருப்பூரில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு, எங்கள் ஏற்றுமதி ₹45,000 கோடி மதிப்புடையது.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால், ₹12,000 கோடி மதிப்புள்ள வணிகம் உடனடியாக ஆபத்தில் உள்ளது. மத்திய அரசு அமெரிக்காவுடன் தலையிட்டு ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று நாங்கள் அவசரமாக விரும்புகிறோம்” என்கிறார் அவர்.
திருப்பூரில் ஜவுளித் தொழில் 2,500 தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவற்றில் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வேலை செய்கின்றனர். அவர்களில் 60% க்கும் அதிகமானோர் பெண்கள்,
அமெரிக்காவின் 50% அதிக வரி விதிப்பால் திருப்பூர் ஏற்றுமதி ஜவுளி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கிவிட்டன. இதனால் திருப்பூர் மக்களின் வேலை வாய்ப்புக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா அறிவித்த கடுமையான வரி உயர்வுகளுக்கு இந்தியாவின் பதில் குறித்து விவாதிக்க பிரதமர் அலுவலகம் ஆகஸ்டு 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டியது.
மூத்த அமைச்சர்கள், பிரதமரின் முதன்மைச் செயலாளர் மற்றும் நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் இந்த விவாதங்களில் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள, அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்திற்கு (ECLGS) ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதிய கட்டண முறை ஜவுளி, தோல், பொறியியல் பொருட்கள் மற்றும் சிறப்பு இரசாயனங்கள் போன்ற துறைகளைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடிப்படையில் பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆகஸ்டு 27 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டமும் நடைபெற்றது.
டிரம்ப் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு கரூர், திருப்பூர் ஆகிய தமிழ்நாட்டின் ஜவுளிப் பூங்காக்களுக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
