கோவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து உள்ளார்.
அதில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திறந்த இருதய அறுவைசிகிச்சை நிறுத்தப்பட்டிருப்பதை மீண்டும் தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். திருப்பூர், நீலகிரி, பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர் என்பதால், ஏழை மற்றும் தொழிலாளர் மக்களுக்கு இது மிக அவசியமான சேவையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநகராட்சியில் குடிநீர், பாதாளச் சாக்கடை கட்டணம் மற்றும் வைப்புத்தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டிருப்பது, மீண்டும் கட்டண உயர்வுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். ட்ரோன் சர்வே அடிப்படையில் சொத்து வரி கூடுதல் விதிப்பு திரும்ப பெறப்பட வேண்டும் என்றும் கோரினார்.
வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை தொடர்பாக, வெளியூரிலிருந்து குப்பை கொண்டு வருவதால் சுற்றுப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர், நோய்த்தொற்று அபாயம் அதிகரிக்கிறது. எனவே, குப்பை பிரச்சனைக்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதேபோல், குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படவில்லை என்றும், போதுமான அளவு நீர் கிடைத்தாலும் 4–5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார். 24×7 குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை மற்றும் கேஸ் பைப் லைன் பணிகள் காரணமாக சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், அவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில் வெள்ளலூரில் தொடங்கிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பணிகளை மீண்டும் துவக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை மற்றும் கழிவுநீர் கலப்பு பிரச்சனையை அகற்ற சீரான பராமரிப்பு செய்யப்பட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மதுக்கரை மரப்பாலம் பணிகள் மந்தமாக உள்ளது; அதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், ஆனைமலை ஒன்றியத்தில் கம்பாளப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம், SIHS காலனி ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மேலும், விவசாயிகள் தங்கள் நிலங்களில் சொந்த பயன்பாட்டிற்காக மண் எடுத்துக்கொண்டதற்காக அபராதம், வழக்கு பதிவு செய்வது ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் வாழ்வை நேரடியாக பாதிக்கும் அடிப்படை வசதிகள் மற்றும் முக்கிய வளர்ச்சி திட்டங்களில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலையை விரைந்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ எஸ்.பி. வேலுமணி தனது மனுவில் வலியுறுத்தி உள்ளார்.













; ?>)
; ?>)
; ?>)