திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1979 – 1980 ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவிகளின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
மொத்தம் 55 மாணவிகள் வகுப்பில் படித்து முடித்து சென்ற நிலையில் அதில் 35 மாணவிகள் 45 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சந்தித்து கொண்டனர்.

தற்போது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களான முன்னாள் மாணவிகள் பாண்டி செல்வி, பொற்செல்வி ஆகியோர் கடந்த ஒரு மாத காலமாக தங்களுடன் படித்த மாணவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத், பாண்டிச்சேரி, சென்னை, மதுரை தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் வருகை தந்த முன்னாள் மாணவிகள் தங்கள் பயின்ற பள்ளியில் ஒன்றுகூடினர் வகுப்பறையில் அமர்ந்து ஒவ்வொருவரும் தங்கள் மலரும் நினைவுகளை பேசியும், நினைவு பரிசுகளை வழங்கியும் பகிர்ந்தும் கொண்டனர். ஒவ்வொருக்கும் சங்கம மெடல்கள் அணிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தக் கால சிந்து நதியின் இசை என்ற பாடலுக்கு நடனமாடிய தோழிகள் இந்த கால பாடல்கள் வரை உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவிகள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டு விடை பெற்று சென்றனர்.




