கன்னியாகுமரி, ஆக. 8: கன்னியாகுமரி பெரியநாயகி தெரு கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவுப் பாலத்தினை மீனவர்களின் பாதுகாப்புக் கருதி சீரமைப்பு செய்து தரவேண்டி தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப்பேரவை நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி பெரியநாயகித் தெரு கடற்கரைப் பகுதியில் தூண்டில் வளைவு வேண்டி கன்னியாகுமரி மீனவர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு முதல் கட்டமாக கடற்கரையிலிருந்து 210 மீட்டர் தொலைவுக்கு தூண்டில் வளைவு அமைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக ரூ 26 கோடி நிதி ஒதுக்கீட்டின் பேரிஸ் 235 மீட்டர் தொலைவுக்கு தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்பணியினை செய்து முடிக்க உத்தரவிட்ட அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கன்னியாகுமரி மீனவர்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
இதனிடையே, தற்போது அமைக்கப்பட்டு வரும் இரண்டாம் நிலை தூண்டில் வளைவானது முகல்நிலை தூண்டில் வளைவை விட உயரம் குறைவாகவும், மேற்பகுதியில் போதுமான அகலம் இல்லாமலும் உள்ளது. இந்த குறைபாட்டினை அப்பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, இதனை சரிசெய்து தர வேண்டுகிறோம். மேலும், கன்னியாகுமரி மீனவர்கள் தங்கள் உயிருக்கும். உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பாக மீன்பிடித்தொழிலை தொடர்ந்து செய்திட இறுதி கட்டமாக இதுவரையிலும் போடப்பட்டுள்ள தூண்டில் வளைவிலிருந்து சற்று சரிவாக தெற்கு நோக்கி ஏற்கனவே உறுதியளித்தபடி இத்திட்டத்தினை முழுமையடைய செய்திடவும், இப்பணியினை விரைந்து முடித்து தரவும் கோரிக்கை விடுக்கிறோம்.

தமிழக அரசு மற்றும் துறை அதிகாரிகளின் கவன ஈர்ப்புக்காக கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒருநாள் மட்டும் வேலை நிறுத்தம் செய்துள்ளோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.