சென்னை கிண்டி நாகி ரெட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம்(38). இவர் த.வெ.க.வின் 168வது வார்டு பொருளாளராக பதவி வகித்து வருகிறார் இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் நாகி ரெட்டிதோட்டம் பிள்ளையார் கோவில் அருகே த.வெ.க சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டது.

அப்போது பேனரை மர்ம நபர்கள் கிழித்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீராம் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரிடம் பேனரை கிழித்தது யார்? உனக்கு தெரியுமா என கேட்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சந்தோஷ் தனது நண்பர்கள் ஷியாம் மற்றும் ஸ்டீபன் ஆகியோருடன் அங்குள்ள மைதானத்தில் மது அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ஸ்ரீராமை பார்த்து சந்தோஷ் 3 மாதத்திற்கு முன் ஏன் என்னை பார்த்து பேனரை கிழித்தாய் எனகேட்டாய் என தகராறு செய்துள்ளார் இதில் வாக்குவாதம் முற்றி ஸ்ரீராமை சந்தோஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஸ்ரீராமின் சகோதரர் ஜானகிராமன் எதற்காக எனது அண்ணனை அடித்தீர்கள்? என்று கேட்டபோது சந்தோஷ் உள்ளிட்ட மூவரும் சேர்ந்து ஜானகிராமனை பிளேடால் முகம், வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த ஜானகிராமனை அவரது உறவினர்கள் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஷியாம்(23), ஸ்டீபன்(22) ஆகிய 2 பேரை கைது செய்தனர் மேலும் தலைமறைவான சந்தோஷை தேடி வருகின்றனர்.