புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் 850 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மற்றும் ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தி சம்பளம் வழங்க வேண்டும் என கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதுவரை நிர்வாகம் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள பணிமனைகளில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால் அரசு பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 140 அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.