சென்னையை அடுத்த வண்டலூர் கேளம்பாக்கம் பிரதான சாலையில் மேலகோட்டையூரில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM) காஞ்சீபுரம் கிளையில் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ரூட்கீயின் இயக்குநர் மற்றும் பெட்ரோடெக் மற்றும் இந்திய நொய் எரிபொருள் தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் கமல் கிஷோர் பந்த், ஆளுநர்கள் குழு தலைவர் மற்றும் சோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் பத்மஶ்ரீ டாக்டர் ஶ்ரீதர் வேம்பு, நிறுவன இயக்குநர் பேராசிரியர் எம்.வி.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் 29 பிஎச்டி, 24 எம்.டெக், 11 எம்.டெஸ், 7 பி டெக் – எம்.டெக் என இரட்டை பட்டங்கள், 329 பி.டெக் உள்ளிட்ட 400 பட்டங்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.
முழு பட்டப்படிப்பு பிரிவுகளின் சிறந்த கல்வி சாதனையாளருக்கான தங்கப்பதக்கம் கணினி அறிவியல் மாணவர் கரண் கிஷோருக்கு வழங்கினர்.
முழு சாதனையாளர் தங்கப்பதக்கம் எலக்ட்ரானிக் மற்றும் தகவல்தொடர்பு பொறியியல் மாணவி அனன்யா லட்சுமி ரவிக்கு வழங்கி கௌரவித்தனர்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கமல் கிஷோர் பந்த், உங்களது பட்டம் வெறும் அறிவு அல்ல, அது ஒரு பொறுப்பு. அறிவையும், மனச்சாட்சியையும் இணைத்து, சாதனை செய்யுங்கள். வருங்காலத்தை நிர்ணயிக்கப்போகும் உங்கள் தலைமுறையே என்று பேசினார்.
மேலும் செயற்கை நுண்ணறிவு, தரவியல், மற்றும் நிலைத்தன்மையை ஒருங்கிணைத்து பொறுப்புடன் வடிவமைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பட்டம் பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.