கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதஆலை (TNPL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை சுற்றி 32 கிராமங்கள் உள்ளது.
காகிதஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் வாய்க்கால் மூலம் அய்யம்பாளையம் பாசன வாய்க்காலில் கலந்து கிழக்கே கடம்பங்குறிச்சி வழியாக வாங்கல் வரை செல்கிறது. தெற்கே விவசாயிகளுக்கு பாசன திட்டத்தின் மூலம் புன்னம் சத்திரம் வரை, பாசனத்திற்காக குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த கழிவு நீர் சுத்தகரிக்கப்படாமலும் மாசு படிந்தும் சுகாதாரமில்லாமல் துர்நாற்றத்துடன் கழிவு நீர்வாய்க்காலில் வெளியேற்றப்படுகிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு உடல் உபாதைக்கு உள்ளாகி பல நோய்கள் பரவிவருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், கிராமங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயத்த நம்பி உள்ள கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் பலர் தங்களின் விவசாயங்களை இழந்து வருமானம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலையின் மூலப்பொருளான பக்காஸ் எனும் மரம் மற்றும் கரும்பு சக்கைத் தூள்கள் காற்றில் பறந்து வந்து அருகில் உள்ள வீடுகளில் படித்துவிடுகிறது.
ஆடு, மாடு , கோழிகள் நோய்வாய்படும் நிலையுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி பொது மக்கள் ஆலையின் நிர்வாகத்திடம் பல முறை முறையிட சென்றால் அவர்களை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று டி என் பி எல் கழிவுநீருடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎல் நிர்வாகத்தை கண்டித்து வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் ஆலையின் பின்புறம் உள்ள கேட் வாசலில் நின்று தங்களுக்கான நியாயத்தை கேட்க வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வராததால் அப்பகுதியை முற்றுகையிட்டு காத்திருந்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்த மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட இடங்களை பொதுமக்கள் குற்றம் சாட்டும் இடங்களை ஆய்வு செய்ததுடன், இதனை விரைவில் சரி செய்வதாக வாக்குறுதி அளித்த நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.