உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, 300க்கும் அதிகமான தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரம் கிராம பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் கோட்டை மலை அடிவார பகுதியில் முத்தையா என்ற விவசாயி 900 க்கும் அதிகமான தென்னை மரங்களை நட்டு வைத்து வளர்த்து வருகிறார்.

நான்கு ஆண்டுகளே ஆன இந்த தென்னை மரங்கள் தற்போது காய்கள் காய்க்கும் பருவத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடிக்கடி கீழே இறங்கி வரும் யானை கூட்டம் முத்தையாவின் தென்னை மரங்களை சேதப்படுத்தி, குருத்து பகுதியை உண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் சுமார் 300 க்கும் அதிகமான தென்னை மரங்கள் சேதமடைந்தால் விவசாயி வேதனையடைந்துள்ளார்.
மேலும், இது குறித்து வனத்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து இந்த யானை கூட்டத்திடமிருந்து தென்னை மரங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, சேதமடைந்த தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
