• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சாம்பியன்ஷிப் வென்றது கரூர் பரணி வித்யாலயா..,

ByAnandakumar

Jul 13, 2025

இந்திய அரசின் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் ஆகிய தென் மண்டல மாநிலங்களில் இருந்து 138 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தென்னிந்திய ஜூடோ விளையாட்டுப் போட்டி 11.07.2025 முதல் இன்று 13.07.2025 வரை கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இதில் 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் சேர்த்து மொத்தம் 63 எடை பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி 21 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் வென்று 155 புள்ளிகள் பெற்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்து தென் மண்டல சிபிஎஸ்இ ஜூடோ சாம்பியன்ஷிப் கோப்பையை தொடர்ந்து 13-வது முறையாக வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். தொடர்ந்து வேளாங்கண்ணி பள்ளி 4 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் வென்று 26 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும், வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி 4 தங்கம், 1 வெண்கலம் வென்று 21 புள்ளிகள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ போட்டி பரிசளிப்பு விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி தலைமை தாங்கினர். சிபிஎஸ்இ தென் மணடல துணை செயலாளர் பரமசிவன், கரூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக் சங்கர், பள்ளி அறங்காவலர் சுபாஷினி, தமிழக உடற்கல்வி தலைமை ஆய்வாளர் ஜெயலட்சுமி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனை மாணவர்களையும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜூடோ சங்க மாநில துணைத் தலைவரும் பரணி வித்யாலயா முதன்மை முதல்வருமான ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஜூடோ பயிற்சியாளர்கள் துரை, முத்துலட்சுமி, கார்த்திக், பார்த்திபன், சங்கீதா ஆகியோரைப் பாராட்டி வாழ்த்தினர். விழாவில் பரணி பார்க் முதல்வர் சேகர், எம்.குமாராசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி, ஆசிரியர்கள், பெற்றோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

மொத்தம் 63 எடை பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற 136 வீரர், வீராங்கனைகள் செப்டம்பர் மாதம் இராஜஸ்தானில் நடைபெற உள்ள தேசிய சிபிஎஸ்இ ஜூடோ போட்டிகளில் ‘தென் மண்டலம்’ சார்பாக கலந்து கொள்ள உள்ளார்கள்.

புகைப்படம்:

தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பையை தொடர்ந்து 13வது முறையாகப் வென்று கரூருக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள், சாதனைக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜூடோ சங்க மாநில துணைத் தலைவரும் பரணி வித்யாலயா முதன்மை முதல்வருமான ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஜூடோ பயிற்சியாளர்கள் மற்றும் வீரர், வீராங்கனைகளைப் பாராட்டி வாழ்த்தும் பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன், சிபிஎஸ்இ தென் மணடல துணை செயலாளர் பரமசிவம், கரூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக் சங்கர், பள்ளி அறங்காவலர் சுபாஷினி, தமிழக உடற்கல்வி தலைமை ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர்.