பூமி பூஜை நடைபெற்ற இடத்தில் கட்டிடப் பணியை தொடங்க வேண்டுமென விஜய கரிசல்குளம் கிராம கமிட்டியினர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளத்தில் சில தினங்களுக்கு முன்பு, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலம் சாத்தூர் எம்எல்ஏ ரகுராமனை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் உடனடியாக வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலம் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்தார். அதனை ஏற்று வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர், பூமி பூஜை நடைபெற்ற இடத்தில் புதிய கட்டிடம் கட்டக்கூடாது என வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்நிலையில் விஜய கரிசல்குளம் இந்து மறவர் உறவின் முறைநலச்சங்கம் சார்பில் ஊர் நாட்டமை ராஜ், தலைவர் தங்கராஜ், செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பார்த்தசாரதி, பொருளாளர் கணேசன், உள்பட ஏராளமானோர் பூமி பூஜை நடைபெற்ற இடத்தில் சிலர் சுய லாபத்திற்காக விஜயகரிசல்குளம் ஊர் பெயரை தவறாக பயன்படுத்தி கட்டிட பணியை நிறுத்த முயற்சி செய்கின்றனர். ஆனால் கட்டிடப் பணியை நிறுத்தாமல் பணியை தொடங்க வேண்டுமென ஆணையாளர் லியாகத் அலியிடம் இந்து மறவர் உறவின்முறை நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மனுவினை ஆணையாளர் லியாகத்அலி படித்துப் பார்த்து பூமி பூஜை நடைபெற்ற இடம் முறையாக அனுமதி வழங்கப்பட்ட இடம் ஆகும். ஆகையால் கட்டடப்பணி தொடங்குவதில் எவ்வித தடையும் இல்லை. ஆகையால் கட்டிட பணி சில தினங்களில் தொடங்கப்படும் என உறுதி அளித்தார். அதற்கு கிராம கமிட்டியினர் நன்றி தெரிவித்தனர்.