மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதில் மின்னாம்பட்டி கிராமத்திலிருந்து 30 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் இப்பள்ளிக்கு வருகை தரும் சூழலில், பேருந்து வசதி தடைபட்டதால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு மாணவ மாணவிகள் தாமதமாக வரும் சூழல் உருவானதாக கூறப்படுகிறது.

தினசரி பள்ளிக்கு தாமதமாக வரும் இந்த மாணவ மாணவிகளை பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வரும் நிறைமதி என்பவர் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் இன்று மாணவ மாணவிகள் பள்ளி செல்ல மறுத்து கிராமத்தில் உள்ள சாவடி பகுதியில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார், மாணவ மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில் பேருந்து வசதி தடைபட்டது அறியாமல் ஆசிரியை கண்டித்தாகவும், அவர் மன்னிப்பு கோரியதோடு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பேருந்து வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மாணவ மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.