தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், கிராம சுகாதார செவிலியர்களின் பணி அமர்ப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

இந்த போராட்டத்தில், வெண் சீருடையில் ஏராளமான கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். கடந்த 40 ஆண்டுகளாக தடுப்பூசி பணி, தாய்-சேய் நலம், கணினி பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வரும் கிராம சுகாதார செவிலியர்களின் பணி இடங்கள் தற்போது 40% காலியாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பயிற்சி முடித்து மூன்றாண்டுகளாக பணி அமர்த்தப்படாமல் உள்ள 2,500 க்கும் மேற்பட்ட மாணவிகளை பணியமர்த்தாமல், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட MLHP (Mid Level Health Providers) ஊழியர்களை தடுப்பூசி பணி போன்ற முக்கிய பணி மேற்கொள்ள அனுமதித்து இருப்பதை கண்டித்தனர். இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், பயிற்சி முடித்த கிராம சுகாதார செவிலியர்களைத் தான் நிரந்தர பணி இடங்களில் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.