• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கடலையும் நிலத்தையும் பாதுகாக்க போராட்டம்..,

கடலையும் கடற்கரையையும் அழிக்கும் தீவிர திட்டங்களை எதிர்த்து, சின்னமுட்டம் பகுதியில் இன்று கடல் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் முயற்சி, கடல் காற்றாலை திட்டம் மற்றும் கப்பல்களின் அதிகப்படியான போக்குவரத்தால் ஏற்படக்கூடிய விபத்துகள் போன்றவையால் கடல் வாழ்வும், விவசாய நிலங்களும் ஆபத்தில் உள்ளன என மக்கள் குற்றம் சாட்டினர்.

கன்னியாகுமரி கடல்பகுதியில் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கியுள்ள ஒன்றிய அரசின் செயலை கண்டித்து சின்னமுட்டம் மீனவ சமூகம் போராட்ட வடிவத்தின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம் இதன் எதிரொலி டெல்லி நாடாளுமன்றத்திலும் விரைவில் ஒலிக்கும் என் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குநர் அருட்பணி டன்ஸ்டன் தெரிவித்தார்.

இதையடுத்து, சின்னமுட்டம் துறைமுகத்தில், மீனவர்கள் தங்கள் படகுகளுடன் கடலில் இறங்கி “பாதுகாத்திடு! பாதுகாத்திடு! கடலையும் கடலோடிகளையும் பாதுகாத்திடு!” என்ற முழக்கத்துடன் கடல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். “அழிக்காதே! அழிக்காதே! கடலையும் கடற்கரையையும் அழிக்காதே!”, “இழப்பீடு வழங்கு! கப்பல் விபத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொரு மீனவருக்கும் ஒரு கோடி இழப்பீடு வழங்கு!” என ஆண்களும் பெண்களும் குரல் கொடுத்தனர்.

இப்போராட்டத்திற்கு சின்னமுட்டம் ஊர் நிர்வாக குழுவினர் தலைமையேற்றனர். துணைத் தலைவர் கமலஸ், செயலர் ஆரோக்கியம், அலெக்சாண்டர், துணைச் செயலாளர் ஜோனிதா ஆகியோர்களுடன் ஊர் உறுப்பினர்கள், விசைப்படகு சங்கம், நாட்டுப்படகு சங்கம், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

போராட்டத்தை வாழ்த்தி, கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருட்திரு டன்ஸ்டன் மற்றும் மக்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பெர்லின் ஆகியோர் உரையாற்றினர். அவர்கள் உரையில், குமரி தெற்கு கடல் பகுதியில் 27155 சதுர கி.மீ. பரப்பளவில் இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும், தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் காற்றாலை திட்டத்தை கைவிட வேண்டும்,

கொல்லம் முதல் மன்னார் வளைகுடா வரையிலான அணுக்கணிம சுரங்க திட்டம் ரத்து செய்ய வேண்டும், கிள்ளியூர் தாலுகாவில் 1144 ஹெக்டேர் நிலங்களில் உள்ள அணுக்கணிம மணல் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும், மீனவர்களின் பாதுகாப்புக்காக, எதிர்பாராத கப்பல் விபத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்தனர்.