சிவகங்கை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற நாட்டரசன் கோட்டையில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் சி நடைபெற்றது. நாட்டரசன் கோட்டையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு சொந்தமான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா ஜூன் 1ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இதையொட்டி, தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏழாவது நாளன்று தங்கரதம் நிகழ்ச்சி நடந்தது. எட்டாவது நாள் இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புகழ்பெற்ற வெள்ளிரதத்தில் கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா வந்தார். இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த எண்ணற்ற பக்தர்கள் திரண்டனர்.
ஒன்பதாவது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் வீற்றிருந்து திருவீதி உலா வந்தார். சுற்றுவட்டார பகுதி மக்கள் பட்டாசு, பஜனை, இசை ஒலியுடன் ஆடிப் பாடி தேரை வடமிட்டு இழுத்து பக்தியுடன் கலந்து கொண்டனர்.