புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
மேலும் இவ்வாலயத்தில் ஸ்ரீசனிஸ்வர பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீசெண்பக தியாகராஜர் நேற்று நள்ளிரவு யதாஸ்தானத்திலிருந்து உன்மத்த நடனமாடி ஆலய பிரகாரங்களை வலம் வந்து நள்ளிரவு திருத்தேருக்கு எழுந்தருளினார்.

அதனை தொடர்ந்து அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீ செண்பக தியாகராஜர், ஸ்ரீ நீலோத்பலாம்பாள் மற்றும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு கேரள பாரம்பரிய செண்டை மேளம் மற்றும் தமிழர் பாரம்பரிய வாத்தியங்களான தாரை தப்பட்டை மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்கவும் சிறப்பாக நடைபெற்றது. நள்ளாறா தியாகேசா என கோஷங்களுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து அம்பாள் தேரையும் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட விழாவில் நாகை, காரைக்கால், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர். விழாவில் தருமபுர ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் , புதுச்சேரி மாநில அமைச்சர் சாய் சரவணன், சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர் சிவா மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா, ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருதேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் பக்தர்கள் நள்ளாறா தியாகசா என்று முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் 07ம் தேதி இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலாவும் . நாளை மறுநாள் 8ம் தேதி இரவு தெப்போற்சவம் நடைபெற உள்ளது.