இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டுமென தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறையினர் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்

அதில் மாவட்ட சுகாதார அலுவலர்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளில் ஈடுபட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்களை பரிமாற வேண்டும்.
தொற்று காணப்படும் பட்சத்தில் அதற்கான கள மருத்துவ குழு அதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் உள்ளிட்டவைகள் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை பொருத்து தேவையான படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் தங்களது கைகளை சோப்பினால் சுத்தமாக கழுவ வேண்டும். சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தல் முக்கியம். கூட்டமான மற்றும் பொது இடங்களுக்கு மக்கள் செல்லும் போது முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை ஊக்கப்படுத்த வேண்டும். இருமல், தும்மல் வரும் போது கைக் குட்டையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கைகளால் கண், காது, வாய் ஆகிய உறுப்புகளை தொடுவதை தவிர்த்தல் அவசியம். பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி இருப்பவர்களை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருத்தல் அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் நோய் பரவலை தடுக்கும் விதமாக கட்டாயம் முக கவசம் இருந்தால் மட்டுமே அனுமதி என்று அங்கு காவல் பணியில் பணியாற்றி வரும் காவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிகுறித்து வருகின்றனர். மேலும் வாஸ்து அணியாமல் வரும் நபர்களுக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விடப்படுகின்றன.