கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலம் இல்லாமல் இறந்த பெண் நோயாளியின் நகை திருட்டு – ஊழியர் கைது.
கோவை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 20 ஆம் தேதி பாப்பநாயக்கன் பாளையம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் பணி புரியும் செந்தில்குமார் என்பவரின் மனைவி செல்வி (39 ) என்பவரின் தாயார் உடல்நிலை பாதிப்பால் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலம் இல்லாமல் அவர் மறுநாள் 21 ஆம் தேதி மருத்துவமனையில் இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்வியின் தாயார் கழுத்தில் கிடந்த தங்க காசு உடன் கூடிய தாலி மாயமாகி இருந்தது.
இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர். இதனால் தனது தாயின் தாலி செயின் மாயமானது குறித்து செல்வி ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மருத்துவமனையின் ஐ.சி.யூ பிரிவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் மூலம் விசாரணை நடந்தது.
அப்போது செல்வபுரம், அருகே உள்ள குமாரபாளையம், அமுல் நகரைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 35 ) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வரும் ராஜசேகர் சம்பவத்தன்று இல்லாமல் இறந்த செல்வியின் தாயார் கழுத்தில் கிடந்த 6 கிராம் எடை உள்ள தங்க தாலியை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து ராஜசேகரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.