நியூயார்க்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தில் நேற்று மாலை
மெக்சிகோ கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மோதியதில் 22 பேர் காயமடைந்தனர். இதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நியூயார்க் நகரின் பழமையான பாலங்களில் ஒன்று புரூக்ளின் பாலம். இது 1883 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. நியூயார்க் நகரத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இந்த பாலம் கருதப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 277 பேருடன் சென்ற மெக்சிகோ கடற்படையின் குவாமெஹோக் என்ற கப்பல் இந்தப் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கப்பலின் 147 அடி உயரமுள்ள இரண்டு கொடிமரங்கள் பாலத்தில் மோதியதில், அவை உடைந்து கப்பலின் தளத்தில் விழுந்தன.
இந்த விபத்தினால் வரலாற்றுச் சிறப்புமிக்க பாலத்திற்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோ கடற்படைக்குச் சொந்தமான இந்த கப்பல் பல்வேறு நாடுகளின் துறைமுகங்களுக்குச் சென்று வந்தது. நேற்று நியூயார்க் துறைமுகத்தில் இருந்து புறப்படும்போது இந்த விபத்து நேரிட்டது.