• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பெண் தலைமை காவலருக்கு, கணவர் உயிரிழந்த தகவல்களை சேகரிக்கும் நிலை…

ByP.Thangapandi

May 8, 2025

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் விபத்து குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் இருந்த பெண் தலைமை காவலருக்கு, அவரது கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த தகவல்களை சேகரிக்கும் நிலை உருவான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கும் புறக்காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் இளவரசி., தினசரி விபத்தில் சிக்கி காயம் மற்றும் மரணித்து வரும் நபர்களின் விவரங்களை சேகரித்து அந்த அந்த காவல் நிலையங்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல்களை வழங்கும் பணியை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பணியில் இருந்த போது இளவரசியின் கணவர் பாண்டி உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் – முண்டுவேலன்பட்டி இடையே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

கிராம சாலை என்பதால் காயமடைந்து கிடந்தவரை மீட்க கூட யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துமனைக்கு வந்ததும், விபத்து குறித்து தகவல் சேகரிக்க சென்ற இளவரசிக்கு தனது கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

வழக்கம் போல இறந்த தனது கணவரின் தகவல்களை பதிவேட்டில் எழுதி வைத்துவிட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளர்.

தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனையில் பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

விபத்து குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் இருந்த காவலருக்கு தனது கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த தகவலை சேகரிக்கும் சூழல் உருவான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.