• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கல்லூரி கட்டிடம் ஏற்படுத்தி தர, கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல்

ByAnandakumar

May 5, 2025

கரூரில் கடந்த 4 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் இயங்கி வரும் அரசு வேளாண் கல்லூரிக்கு கல்லூரி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்தனர்.

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் உழவர் சந்தை அருகில் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் கடந்த 2021 முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக அரசு வேளாண்மை கல்லூரி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லூரிக்கு என உரிய இடம் ஒதுக்கி, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் , போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதை கண்டித்து கரூர் திருச்சி சாலையில் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் 60-க்கும் மேற்பட்டோர் பெற்றோருடன் சேர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிற்சிக்காக வெளியே அழைத்து செல்லாமல், ஆறு மாத பருவத் தேர்வுக்கு கடைசி ஒரு வாரம் மட்டும் முழு பாடத்தையும் படிக்க சொல்லி தொந்தரவு செய்கின்றனர். மாணவிகளுக்கு போதிய கழிப்பிட வசதி இல்லை. முறையான செய்முறை வகுப்புகள் எடுப்பதில்லை.

மேலும், வேளாண்மை கல்லூரி மாணவிகள் தங்கி உள்ள விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று கூறினர். இந்த போராட்டத்தின் காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக திமுக அரசு தேர்தல் நேரத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என குறிப்பிட்டு இருந்த நிலையில், இதுவரை வேளாண் கல்லூரி அமைக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.