• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சூரைக்காற்றின் காரணமாக மரங்கள் விழுந்து சேதம்..,

ByP.Thangapandi

May 5, 2025

உசிலம்பட்டி அருகே மழைக்கு முன் வீசிய சூரைக்காற்றின் காரணமாக 700 பப்பாளி மரங்கள், 50 முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலான சாரல் மழை பெய்தது.

இந்த மழைக்கு முன்னதாக வீசிய சூரைக்காற்று காரணமாக உசிலம்பட்டி அருகே பேச்சியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் சுமார் 700 பப்பாளி மரங்களும், இதன் அருகிலேயே ராஜயோக்கியம் என்பவரது தோட்டத்தில் 50 முருங்கை மரங்களும் ஒடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு ஏக்கர் பரப்பளவில் வைக்கப்பட்ட பப்பாளி மரங்களில் தற்போது தான் பப்பாளி பழங்கள் பறிக்கும் பணிகள் நடைபெற்று வந்த சூழலில், சுமார் 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், முருங்கை மரங்கள் முற்றிலுமாக விழுந்து சேதமடைந்ததால் ஒரு லட்சம் வரை நஷ்டத்தை உருவாக்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வருவாய்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித்துள்ள சூழலில் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.