பெரம்பலூர் அருகே உள்ள கல்லாற்றில் கரண்ட் போட்டு மீன் பிடிக்க சென்ற இரண்டு வாலிபர்கள் ஆற்றில் தவறி விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவில் தொண்டமான் துறை கிராமத்தில் உள்ள கல்லாறு உள்ளது. இந்த ஆற்றில் உள்ள தண்ணீரில் அதிக அளவில் மீன்கள் உள்ள நிலையில்
அந்த மீன்களை பிடிப்பதற்காக அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் இரவு நேரங்களில் மின்சாரத்தை ஆற்று தண்ணீரில் செலுத்துவதால், தண்ணீரில் அதிக அளவிலான மின்சாரம் பாயும் போது தண்ணீருக்குள் இருக்கும் மீன்கள் ஷாக் அடித்து மயங்கிய நிலையில் தண்ணீருக்கு மேலே மிதக்கும், அந்த மீன்களை பிடித்து எடுத்து வருகின்றனர், இது ஒரு ஆபத்தான மீன் பிடிக்கும் முறையாகும்.
இந்நிலையில் கல்லாற்றில் அதிகாலை தொண்டமாந்துறையை சேர்ந்த சேகர் மகன் தினேஷ் குமார்( 28) கணேசன் மகன் ரஞ்சித்( 25) இருவரும், கல்லாற்றில் மின்சாரத்தை செலுத்தி மீன் பிடிக்க சென்று உள்ளனர்,
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த தண்ணீரில் இருவரும் வழுக்கி விழுந்துள்ளனர்,

இதனால் ஆற்று தண்ணீரில் இருந்த அளவுக்கு அதிகமான மின்சாரம் தாக்கியதாலும், தண்ணீருக்குள் விழுந்து மூச்சுத் திணறலாலும் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த ஊர் மக்கள், அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் விரைந்து வந்து, இருவரது உடலையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆற்றுக்கு மீன் பிடிக்க சென்ற இரண்டு வாலிபர்கள் தண்ணீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் மிகவும் அபாயகரமான மற்றும் ஆபத்தான வகையில் தண்ணீரில் மின்சாரத்தை செலுத்தி மீன்பிடிப்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிய வருகிறது.