நீலகிரி மாவட்டம் உதகைக்கு இன்று வருகை புரிந்த சட்டசபை சபாநாயகர் அப்பாவு வந்த வாகனம் குன்னூர் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், இன்று காலை முதல் மாவட்ட காவல் துறை சார்பாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி வரும் வாகனங்கள் குன்னூர் மார்க்கமாகவும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள் கோத்தகிரி மார்க்கமாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் குன்னூர் லெவல் கிராஸ் மற்றும் காட்டேரி பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. காட்டேரி குன்னூர் இடையே இரண்டு கிலோமீட்டர்க்கும் மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இந்நிலையில், இன்று மாலை சற்று முன் சட்டசபை சபாநாயகர் அப்பாவு உதகைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காட்டேரி குன்னூர் இடையே காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சபாநாயகர் அப்பாவுவின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அப்போது காவல்துறையினர் அவரின் வாகனம் செல்ல வழி ஒதுக்கி கொடுத்ததால் உதகைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.