சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சிபி எஸ் சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இது தேசிய கல்வி கொள்கை முலம் ஏற்பட்டு உள்ள நெருக்கடி. எனவே தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது. இதை தவிர்க்க வேண்டும் என வலுவான குரல் எழுந்து சொல்லி வருகிறேன்.

தேசிய அளவில் இதை தவிர்க்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை மற்றும் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்து உள்ளோம். அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் முறை ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. மாணவர்கள் குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தால் தான் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என புதிய தேசிய கல்வி கொள்கை சொல்கிறது.
மாணவர்களின் கல்வியை பள்ளியில் நிறுத்தி வீட்டிற்கு அனுப்புவது இடை நிறுத்தல் சதவீதத்தை உயர்த்த தான் தேசிய கல்வி கொள்கையை வகுத்தவர்களின் நோக்கம். மோடி அரசின் நோக்கம். பள்ளி படிப்பிலேயே நிறுத்தி விட்டு குலத் தொழிலுக்கு அனுப்புவது. அதனால் தான் தேசிய கல்வி கொள்கை குலத் தொழிலை வலியுறுத்துவதாக இருக்கிறது. இதனால் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு திமுக அரசு வெளிப்படையாக அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தர தான் நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.
ஜனநாயக சக்திகள் இதை புரிந்து கொண்டு தேசிய அளவில் எதிர்ப்பு குரலை எழுப்ப வேண்டும். 12ம் வகுப்புக்கு மட்டும் பொது தேர்வு இருந்தால் போதுமானது என்பது தான் விடுதலை சிறுத்தைகளின் கருத்து. 5,8,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளில் வரிசையாக பொது தேர்வுகள் நடத்தி மாணவர்களை வடி கட்டி வீட்டிற்கு அனுப்புகிற முயற்சியை தான் பா.ஜ.க. அரசு மேற்கொள்கிறது. தேசிய கல்வி கொள்கை ஏன் வேண்டாம் என்பதற்கு தற்போது அறிவித்து உள்ள அறிவிப்பு முலம் புரிந்து கொள்ள முடியும்.
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கான பாதுகாப்பு திரும்ப பெற்று இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு மீண்டும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும். அவருக்கு அச்சுறுத்தல் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. அச்சுறுத்தல் தொடர்வதால் அவருக்கு உரிய பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.