• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

யானை சின்னம் வழக்கு : ஜூன் 4க்கு ஒத்திவைப்பு

Byவிஷா

Apr 30, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான யானை சின்னத்திற்கு எதிராக தொடர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கு ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி எங்கள் கட்சியின் சின்னம் யானை சின்னம் ஆகும். இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன்பு கடந்த ஏப்ரல் 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ஆனந்தன் வாதிடுகையில், “பகுஜன் சமாஜ் கட்சி தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சின்னத்தை, அசாம் தவிர மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் விஜய்யின் தவெக-வின் கட்சிக் கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியபோது, தவெக இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் பதிவு செய்யும் போது இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எங்களிடம் கூறியிருந்தது. எனவே யானை சின்னத்தைப் பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் ஆனந்தன் வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சக்திவேல், இந்த மனுவுக்கு வரும் ஏப்ரல் 29-ம் தேதிக்குள், தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி இன்று விடுமுறை என்பதால் பொறுப்பு நீதிபதி வழக்கை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.