சிவகங்கை திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளரான பிரவீன் குமார் இன்று தனது சொந்த ஊரான சாமியார்பட்டியில் தனது தோப்பில் இருந்துள்ளார். அப்போது ஐந்துக்கும் மேற்பட்ட மர்ம கும்பல் வந்து பிரவீன் குமாரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. தகவல் அறிந்து வந்த சிவகங்கை தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு வந்தனர். கொலை சம்பவத்தை அறிந்து உறவினர்கள், நண்பர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். ஆளும் கட்சியின் மாவட்ட அளவிலான பொறுப்பில் இருக்கும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி, மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், துணை காவல் கண்காணிப்பாளர் அமலா அட்லின் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர். ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
