காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவரது மகன் முத்து என்கிற முத்துக்குமார் (வயது 28). இவர் கடந்த 18.07.2024 அன்று இரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இரவு நேரத்தில் பெண் ஒருவரை வீட்டருகே கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவரது மகளையும் வீடு புகுந்து தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா நேற்று தீர்ப்பு வழங்கினார்.
சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், சிறுமிக்கு சொற்ப காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 1 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
அதேபோல பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், பெண்ணை தாக்கி கொடுங்காயம் விளைவித்து உடல் ஊனம் ஏற்படுத்திய குற்றத்திற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்கும் படியும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.6 லட்சமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.













; ?>)
; ?>)
; ?>)